தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில்முன் பாய்ந்த ‘ஹீரோ’


தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில்முன் பாய்ந்த ‘ஹீரோ’
x
தினத்தந்தி 13 Feb 2022 6:48 AM IST (Updated: 13 Feb 2022 6:48 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற உண்மையான ஹீரோ போல, அந்த ரெயிலுக்கு அடியில் பாய்ந்த துணிச்சல்மிக்க மனிதரை மத்திய பிரதேச மாநிலமே கொண்டாடுகிறது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

போபால்,

மத்திய பிரதேச மாநிலம், போபால் அருகேயுள்ள பர்கேடியில் சம்பவத்தன்று முகமது மெகபூப் (வயது 37) என்பவர், மசூதியில் தொழுகை முடித்து விட்டு ரெயில் தண்டவாள ஓரத்தில் உள்ள பாதை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அவரைப் போல பலரும் அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது. 20 வயதை கடந்த இளம்பெண் ஒருவர் முதுகில் பையை சுமந்தவாறு தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சரக்கு ரெயில் வரத்தொடங்கியதை கண்டபோது அந்தப்பெண்ணுக்கு பீதி ஏற்பட்டு அலறியவாறு தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அவரால் எழுந்து ஓட முடியவில்லை.

அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பலரும் நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர செய்வது அறியாமல் திகைத்து உறைந்து போயினர்.

அந்தகணத்தில், தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தாலும் கொஞ்சமும் யோசிக்காமல் தன் உயிரைப்பொருட்படுத்தாமல் முகமது மெகபூப் ரெயில் முன் குதித்து, மின்னல் வேகத்தில் அந்தப் பெண்ணை தண்டவாளங்களுக்கு நடுவே இழுத்து படுக்கப்போட்டு, அவரது தலைக்கு நேராக தானும் தலை வைத்துப்படுத்துக்கொண்டு அந்தப் பெண்ணை தலையைத் தூக்க விடாமல் பார்த்துக்கொண்டார்.

ரெயிலின் 28 வேகன்களும் கடந்து செல்லும் வரை அவர்கள் எழுந்து விடாமல் இருக்க அங்கிருந்த மற்றவர்கள் உஷார்படுத்திக்கொண்டிருந்தனர்.

ரெயில் முழுமையாக கடந்து சென்ற பின்னர் இருவரும் எழுந்து தண்டவாளத்தை கடந்து வந்து பெருமூச்சு விட்டனர்.

கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அந்தப் பெண்ணின் அனுபவம் அவரது குடும்பத்தினரை உருக்கியது. ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி கண் கலங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. கடந்த 5-ந் தேதி இரவு சுமார் 8 மணியளவில் நடந்த சம்பவம், இப்போதுதான் முகமது மெகபூப்பின் நண்பர் சோயப் ஹாஸ்மி மூலம் ஊடக உலகுக்கு வந்துள்ளது.

அந்த பெண்ணை மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய முகமது மெகபூப்பை “இவர்தான் அசல் ஹீரோ” என்று அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Next Story