'வாட்ஸ் அப் ஸ்டேட்டசால்’ வந்த வினை - பெண் அடித்துக்கொலை
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் பெண் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் லிலாவதி தேவி பிரசாத் (48 வயது). இவருக்கு 20 வயது நிரம்பிய மகள் உள்ளார்.
இதற்கிடையில், லிலாவதியின் மகள் நேற்று முன் தினம் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதை அந்த இளம்பெண்ணின் தோழி பார்த்துள்ளார். லிலாவதியின் மகளுக்கும் அவரது தோழிக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது.
இதனால், தனது தோழி தன்னைப்பற்றி எழுதியே வாட்ஸ் அப்பில் ஸ்ட்டேட்டசாக வைத்துள்ளார் என அந்த இளம்பெண் கருத்தியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதை கேட்ட அந்த இளம்பெண்ணின் தாய் உள்பட குடும்பத்தினர் சிலர் லிலாவதி தேவியின் வீட்டிற்கு நேற்று வந்துள்ளனர்.
அங்கு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தொடர்பாக லிலாவதி தேவி, அவரது மகள் மற்றும் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளம்பெண்ணின் தாய் மற்றும் குடும்பத்தினர் லிலாவதி தேவி மற்றும் அவரின் குடும்பத்தினரை உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் லிலாவதி தேவி படுகாயமடைந்தார். தாக்குதல் நடத்திய இளம்பெண்ணின் குடும்பத்தினர் லிலாவதி வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்த லிலாவதி தேவி சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த லிலாவதி தேவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், லிலாவதி தேவி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளம்பெண்ணின் தாயார் உள்பட குடும்பத்தினர் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Related Tags :
Next Story