சமாஜ்வாடி கட்சிக்கு வாய்ப்பு அளித்தால் உத்தரபிரதேசம் மீண்டும் குண்டர்கள் ராஜ்யமாகி விடும்: பிரதமர் மோடி
சமாஜ்வாடி கட்சிக்கு வாய்ப்பு அளித்தால், உத்தரபிரதேசம் மீண்டும் குண்டர்கள் ராஜ்யமாகி விடும் என்று பிரதமர் மோடி கூறினார்.
நிலம் பறிப்பு
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, கான்பூர் டிஹாட் நகரில் நேற்று நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
உத்தரபிரதேசத்தில் முன்பு இருந்த அரசுகள், மாநிலத்தை இரவும், பகலுமாக கொள்ளை அடித்தன. அது மட்டுமின்றி, மக்களை கிரிமினல்களின் கருணையில் விட்டு சென்றன.
ஏழை, நடுத்தர மக்கள், வியாபாரிகள் ஆகியோரின் நிலங்கள் சமாஜ்வாடி ஆதரவாளர்களால் எப்படி பறிக்கப்பட்டன என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு அளித்தால், மாநிலம் முழுவதையும் குண்டர்கள் ராஜ்யமாக்கி விடுவார்கள்.
மாபியா கும்பல்
கடந்த 5 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் அரசு எடுத்த நடவடிக்கையால், மாபியா கும்பல் இறுதி மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. சமாஜ்வாடிக்கு வாய்ப்பு அளித்தால், மாபியா கும்பலுக்கு உயிர் கொடுத்ததுபோல் ஆகிவிடும். அக்கட்சி வாரிசு அரசியல் செய்து வருகிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. தேர்தல் முடிந்தவுடன், தோல்விக்கு அந்த கட்சிதான் காரணம் என்று கூறி எட்டி உதைக்கும்.
பா.ஜனதாவுக்கு வெற்றி
முந்தைய அரசுகள், ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், யோகி ஆதித்யநாத் அரசு, நாங்கள் அனுப்பிய பணத்தில் வீடு கட்டி, 34 லட்சம் பேருக்கு வீடுகள் அளித்துள்ளது.
முதல் 2 கட்ட தேர்தல்கள் அடிப்படையில் பார்த்தால், உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும். அதனால் இந்த ஆண்டு 10 நாட்களுக்கு முன்பே ‘ஹோலி’ பண்டிகை வந்தது போல் இருக்கும்.
முஸ்லிம் சகோதரிகளும் மோடியை ஆசீர்வதிக்க பா.ஜனதாவுக்கு ஓட்டளிக்கிறார்கள். முன்பெல்லாம், அற்ப காரணங்களுக்காக ‘முத்தலாக்’ சொல்லி முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை நாசமாக்கப்பட்டு வந்தது. ‘முத்தலாக்’ தடை சட்டம் மூலம் அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
இதுவா மதச்சார்பின்மை?
நேற்று ஒரு பேட்டியை பார்த்தேன். அதில், மம்தா பானர்ஜி கட்சியின் ஒரு தலைவரிடம், ‘‘கோவா சட்டசபை தேர்தலில் ஏன் போட்டியிடுகிறீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘‘கோவாவில் இந்து ஓட்டுகள் ஒன்று சேருவதை தடுக்கவே போட்டியிடுகிறோம்’’ என்று பதில் அளித்தார். இதுவா மத சார்பின்மை? இந்த கருத்தை தேர்தல் கமிஷனும், நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story