கூட்டாட்சி முறையை பாதுகாக்க மு.க.ஸ்டாலினுடன் இணைந்து முயற்சி: மம்தா பானர்ஜி
அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. கூட்டாட்சி முறையை பாதுகாக்க மு.க.ஸ்டாலினுடன் இணைந்து முயன்று வருகிறேன் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
காங்கிரஸ் போகட்டும்
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒரே குடையின் கீழ் வருவது அவர்களது கடமை. அதற்காக கை கோர்க்க வருமாறு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தேன். அக்கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டால், நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
காங்கிரஸ் அதன் வழியில் போகட்டும், நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநில கட்சியும் சுமுக உறவு கொண்டிருக்கவில்லை.
மு.க.ஸ்டாலின்
வெறுப்பு, அராஜகம் ஆகியவற்றில் இருந்து நாட்டை விடுவிக்க இதுவே நேரம். அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு திரும்பிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோருடன் பேசினேன். நாட்டின் கூட்டாட்சி முறையை அழிக்கப்படாமல் பாதுகாக்க நாங்கள் இணைந்து முயன்று வருகிறோம்.
உத்தரபிரதேசத்தில் பெண்கள் எரித்து கொல்லப்படுகின்றனர். விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்படுகின்றனர். அம்மாநில முதல்-மந்திரி ‘யோகி’ அல்ல. உலக விஷயங்களில் பற்றுள்ள ‘போகி’.
உ.பி.யில் பிரசாரம்
உத்தரபிரதேசத்தில் தேச நலனுக்காகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடவில்லை. ஏனென்றால், சமாஜ்வாடி கட்சி பலவீனமடைய நாங்கள் விரும்பவில்லை. முதல்கட்ட தேர்தல் நடந்த 57 தொகுதிகளில், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்த மாதம் 3-ந் தேதி, மீண்டும் பிரசாரம் செய்ய உத்தரபிரதேசம் செல்கிறேன். நாட்டை காப்பாற்ற வேண்டுமானால், முதலில் உத்தரபிரதேசத்தை காப்பாற்ற வேண்டும்.
கோவா சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story