மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்க கேரள அரசு செலவிட்ட தொகை... வெளியான புதிய தகவல்
இளைஞரை மீட்பதற்கு பணிக்குழுக்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் செலவுகளுக்கான கணக்கு கேரள அரசு கருவூலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பாபு (வயது28) தனது நண்பர்களுடன் சேர்ந்து மலம்புழையில் உள்ள குரும்பச்சி மலையில் ஏறியபோது, கால் தவறி பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.
இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து உதகை வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மலை இடுக்கில் 48 மணி நேரமாக சிக்கி உள்ள பாபுவை நெருங்கி, அவருக்கு உணவு, தண்ணீர் வழங்கினர். தீயணைப்புத்துறை, கடலோர பாதுகாப்பு படை என பல துறையினர் இந்த மீட்புப் பணியில் இணைந்து செயல்பட்டனர். பின்னர், இளைஞர் பாபுவை இந்திய ராணுவ வீரர்கள் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
இந்த நிலையில் மலை இடுக்கில் சிக்கிய பாபுவை மீட்பதற்காக கேரள அரசு செலவிட்ட தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேர வாடகை மட்டும் 2 லட்சம் ரூபாய் ஆகும். அதன்படி 7 ஆம் தேதி மாலை முதல் 9 ஆம் தேதி காலை வரையிலான வாடகை மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை ஆகியுள்ளது.
இது தவிர பணிக்குழுக்களுக்கு செலவான தொகை 15 லட்சம் ரூபாய் ஆகும். இன்னும் சில செலவுகளுக்கான கணக்கு கேரள அரசு கருவூலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதனையும் சேர்த்தால் மொத்த செலவு 75 லட்சம் ரூபாயை தாண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story