"7 மாநிலம் 14 மனைவிகள்" காதலர் தினத்தில் கைதான "கல்யாண மன்னன் கில்லாடி டாக்டர்"
7 மாநிலங்களில் 14 மனைவிகளுடன் வாழ்ந்துவந்த கில்லாடி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டம் பட்குரா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர ஸ்வெய்ன் (54 வயது) . ஹோமியோபதி டாக்டரான இவர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
ரமேஷுக்கு 1979-ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் 1982-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. ஒடிசாவை சேர்ந்த இந்த இரு மனைவிகள் மூலம் ரமேஷூக்கு 5 குழந்தைகள் உள்ளன.
அதன்பின்னர், வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிக்கொண்டு ரமேஷ் வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளார். பின்னர் 1979 முதல் 2020 வரை ரமேஷ் மேலும் 12 பெண்களை வெவ்வேறு மாநிலங்களில் திருமணம் செய்துள்ளார்.
இதன் மூலம் ரமேஷ் மொத்தம் 14 பெண்களை திருமணம் செய்துள்ளார். தனது 14 மனைவிகளுக்கும் ஒருவரை ஒருவர் சந்திக்காத வகையில் டெல்லி, மராட்டியம், மேற்குவங்காளம், ஆந்திரா, ஜார்கண்ட், ஒடிசா என நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள பெண்களை அவர் திருமணம் செய்துள்ளார்.
டாக்டர் என்ற மதிப்பை பயன்படுத்தி ஆன்லைன் திருமண தகவல் மையங்களில் பதிவு செய்து பள்ளி ஆசிரியை, வழக்கறிஞர், டாக்டர், பாதுகாப்பு படையில் பணிபுரியும் பெண் என பல்வேறு பெண்களை ரமேஷ் திருமணம் செய்துள்ளார்.
போலி அடையாள அட்டை, ஆவணங்கள், போலி ஆதார் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ரமேஷ் பெண்களை திருமண வலையில் சிக்க வைத்துள்ளார். விவகாரத்து பெற்று அல்லது தனியாக வாழ்ந்து வரும் பெண்களை குறிவைத்து ரமேஷ் திருமண வலையில் சிக்கவைத்துள்ளார்.
தனது வலையில் விழும் பெண்களை திருமணம் செய்த பின்னர் சில மாதங்களில் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு வேறு மாநிலத்திற்கு செல்வதை ரமேஷ் வழக்கமாக கொண்டுள்ளார்.
ரமேஷின் தில்லுமுல்லு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. டெல்லியை சேர்ந்த ஆசிரியை ரமேஷை 2018-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அந்த ஆசிரியை-யை ரமேஷ் ஒடிசா மாநிலம் புவனேஷ்வருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ரமேஷ் வேறு சில பெண்களை ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் போலி ஆவணங்களை காட்டி ஏற்கனவே திருமணம் செய்தது அந்த ஆசிரியைக்கு தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 'கல்யாண மன்னன்’ ரமேஷ் குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கில்லாடி டாக்டர் ரமேஷை தேடி வந்தனர். ஆனால், அவர் வேறு மாநிலத்திற்கு தப்பிச்சென்றுவிட்டார். இதனால், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், காதலர் தினமான நேற்று (பிப்.14) 'கில்லாடி டாக்டர்’ ரமேஷை போலீசார் கைது செய்தனர். புவனேஷ்வரில் தங்கி இருந்த ரமேஷை ஆந்திர தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு நகை, பணத்துடன் ரமேஷ் பெரும்பாலும் அசாம் மாநிலத்தில் வசித்து வந்துள்ளார்.
ரமேஷூன் 14 மனைவிகளில் 9 மனைவிகளை தொடர்பு கொண்டு அவரது மோசடி குறித்து தற்போது தெரியபடுத்தியுள்ளோம். எஞ்சிய மனைவிகளை தொடர்பு கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது’ என்றனர். மேலும், கைது செய்யப்பட்ட ரமேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
7 மாநிலங்களில் 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய டாக்டர் காதலர் தினத்தன்று பிடிபட்ட நிகழ்வு பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story