உடுப்பியில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Feb 2022 2:23 AM IST (Updated: 16 Feb 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

உடுப்பி, 

கர்நாடக மாநிலத்தில் தற்போது முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணியும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும் முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வந்தனர். அதனால் அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் உடுப்பி மாவட்டம் பகீரனகட்டே பகுதியில் உள்ள உருது பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அப்போது அந்த மாணவிகளை ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தலைமை ஆசிரியர் அனுமதி அளித்தார். இதனால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து திருப்புதல் தேர்வை எழுதினர்.

கலபுரகி டவுனில் உள்ள ஜகாட் உருது பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அதிருப்தி அடைந்த அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் பள்ளிகளில் வகுப்பறையில் மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல், சிக்கோடி தாலுகாவில் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த 67 மாணவிகளும், பள்ளிக்கு வராமல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டனர்.

சிவமொக்கா டவுன் பி.எச். ரோட்டில் உள்ள கர்நாடக பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எங்களுக்கு ‘எங்கள் மதமும், கலாசாரமும் முக்கியம். எங்களுக்கு தேர்வு முக்கியமல்ல’ என்றனர். பின்னர் தேர்வை புறக்கணித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பினர். இதேபோல் சிக்கமகளூருவிலும் ஹிஜாப் அணிந்து வந்த 13 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் தேர்வு எழுதாமல் வீடு திரும்பினர்.

Next Story