ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 9 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு - மத்திய அரசு தகவல்


ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 9 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2022 5:53 PM GMT (Updated: 16 Feb 2022 5:53 PM GMT)

ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 9 கோடிக்கு அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

கிராமப்புற மக்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. மிகப்பெரிய இந்த திட்டத்துக்காக 5 ஆண்டுகளுக்கு ரூ.3.6 லட்சம் கோடி நிதியும் ஒதுக்கியது.

இந்த திட்டத்தின் மூலம் தற்போது 9 கோடிக்கு அதிகமான குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 98 மாவட்டங்கள், 1,129 வட்டாரம், 66,067 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 1,36,135 கிராமங்கள் குடிநீர் இணைப்பை பெற்றுள்ளதாக ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கோவா, தெலுங்கானா, அரியானா, அந்தமான், புதுச்சேரி, தத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டையூ-டாமனில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியிருப்பதாக கூறிய மத்திய அரசு, குஜராத், பஞ்சாப், இமாசலபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் பயன்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

3.8 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும், 15-வது நிதிக்கமிஷன் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான மானியங்களை இணைத்து 2021-22-ல் மாநிலங்களுக்கு ரூ.26,940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதாவது 2025-26 வரை ரூ.1,42,084 கோடி உறுதிசெய்யப்பட்ட நிதியுதவி உள்ளது எனவும் அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது.

Next Story