இஸ்லாமிய மத பெண்கள் ஹிஜாப்பை விருப்பப்பட்டு அணிவதில்லை - யோகி ஆதித்யநாத்
இஸ்லாமிய மத பெண்கள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்படுவதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.
லக்னோ,
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வர தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மத அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்ட போதும், சில பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து நுழைய முயற்சித்தனர். இதனால், ஒரு சில பள்ளி, கல்லூரிகளில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இந்த நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த யோகி ஆதித்யநாத் கூறுகையில், இஸ்லாமிய மத பெண்கள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டனர். விருப்பப்பட்டு ஹிஜாப்பை யாரும் அணியவில்லை. முத்தலாக் முறையை இஸ்லாமிய மத பெண்கள் விருப்பப்பட்டா ஏற்றுக்கொண்டார்கள்? சகோதரிகள், மகள்களிடம் கேட்டுப்பாருங்கள். இஸ்லாமிய மத பெண்களின் கண்ணீரை நான் பார்த்துள்ளேன். தங்கள் அனுபவத்தை அவர்கள் பேசும்போது, அவர்களின் உறவினர்களுக்கு கண்ணீர் வருகிறது.
முத்தலாக்கை ஒழித்ததற்காக ஜனூபூரை சேர்ந்த பெண் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். ஒருவர் தான் அணியும் உடையை தேர்வு செய்வது அவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது’ என்றார்.
Related Tags :
Next Story