மக்களுக்காக வேலை செய்யும் போது அரசியல் வேறுபாடுகளை தள்ளி வைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே


மக்களுக்காக வேலை செய்யும் போது அரசியல் வேறுபாடுகளை தள்ளி வைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 18 Feb 2022 12:47 AM IST (Updated: 18 Feb 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்காக வேலை செய்யும் போது அரசியல் வேறுபாடுகளை தள்ளி வைக்க வேண்டும் என ‘வாட்டர் டாக்சி’ சேவை தொடக்க விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.

வாட்டர் டாக்சி சேவை

மும்பை- நவிமும்பை இடையே 30 கி.மீட்டர் தூரத்தை நீர்வழியில் இணைக்கும் வகையில் ‘வாட்டர் டாக்சி' (படகு போக்குவரத்து) சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திாி சர்பானந்த் சோனோவால் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து வாட்டர் டாக்சி சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, அஸ்லாம் சேக் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:-

நாட்டிலேயே முதல் முறையாக வாட்டா் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் ரெயில் சேவையும் மும்பை - தானே இடையே தான் தொடங்கப்பட்டது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்தது. மும்பையில் என்ன தொடங்கப்பட்டாலும் அது நாடு முழுவதும் விரிவடையும். ஒருவர் கடல் பரப்பை ஆட்சி செய்ய வேண்டும் என சத்ரபதி சிவாஜி மன்னர் கூறுவார். அதற்கான பணியிலும் ஈடுபட்டார். ஆனால் ஆங்கிலேயர்கள் அதன்பிறகு ரெயில் சேவையை கொண்டு வந்தனர். இந்த நீர்போக்குவரத்து சேவை எலிபெண்டா தீவுக்கும் செல்ல பயன்படும்.

வேறுபாடுகளை தள்ள வேண்டும்

வளர்ச்சி அடைய உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியம். நாம் மக்கள் மற்றும் வளர்ச்சிக்காக வேலை செய்யும் போது அரசியல் வேறுபாடுகளை தள்ளி வைக்க வேண்டும். கடல் சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்க மட்டும் அல்ல. அதை பொருளாதாரத்தை ஈட்டவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மராட்டியத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story