விவசாயிகளுக்கு எப்போதும் காங்கிரஸ் துரோகம்: மோடி
விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துரோகம் செய்து வந்துள்ளது என்றும், சுவாமிநாதன் கமிஷன் சிபாரிசுகளை கிடப்பில் போட்டது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
துரோகம்
பஞ்சாப் சட்டசபை தேர்தல், 20-ந் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்று முடிவடையும் நிலையில், நேற்று அங்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அபோஹர் என்ற இடத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
விவசாயம் தொடர்பாக சுவாமிநாதன் கமிஷன் சிபாரிசுகளை அளித்தது. அவற்றை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் நீண்ட காலமாக அவற்றை கிடப்பில் போட்டது. விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துரோகம் ெசய்து வந்திருப்பதற்கு இந்த வரலாறே சாட்சி.
பின்னர், பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. விவசாயிகளிடம் இருந்து சாதனை அளவுக்கு உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மாபியா கும்பல்
பஞ்சாப் மாநில முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை அவதூறாக பேசுகிறார். குரு ரவிதாஸ், உத்தரபிரதேசத்தில் வாரணாசியிலும், குரு கோவிந்த் சிங் பீகாரிலும் பிறந்தவர்கள். அவர்கள் பிறந்த மண்ணை அவமதிப்பீர்களா?
இங்குள்ள காங்கிரஸ் அரசின் கொள்கைகளால் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஒவ்வொரு வர்த்தகத்தையும் மாபியா கும்பல் கைப்பற்றி விட்டது.
பஞ்சாப் மாநிலம் அனைத்து மட்டத்திலும் வளர்ச்சி அடைவதற்கு பா.ஜனதா தலைைமயில் ஆட்சி அமைய வேண்டும். அதற்காக எங்களுக்கு 5 ஆண்டு வாய்ப்பு தாருங்கள். பா.ஜனதா அமைக்கும் இரட்டை என்ஜின் அரசால் வேகமான முன்னேற்றம் ஏற்படும்.
பஞ்சாப்பில் இருந்து போதைப்பொருள் கும்பலும், மணல் மாபியாவும் விரட்டி அடிக்கப்படும். தொழில் செழித்து வளரும். வேலைவாய்ப்பு பெருகும். சுயவேலைவாய்ப்புக்கான வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.
பள்ளி அருகே மதுக்கடை
அதுபோல், ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப்பை ஆள தகுதியற்றது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாடு முழுமைக்குமான திட்டம். அதை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமல்படுத்த மறுக்கிறது. தனது அரசில் ஒரு சீக்கியரை கூட மந்திரி ஆக்கவில்லை.
டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் அருகே மதுக்கடைகளை திறந்துள்ளது. ஆனால், பஞ்சாப்பில் போதைப்பொருளை ஒழிப்போம் என்று பேசுகிறது. அவர்கள் பஞ்சாப்பை உடைக்க கனவு காண்கின்றனர். அவர்களது செயல் திட்டத்துக்கும், பாகிஸ்தான் செயல்திட்டத்துக்கும் வேறுபாடு இல்லை.
இவ்வாறு மோடி பேசினார்.
Related Tags :
Next Story