இந்திய எம்.பி.க்கள் குறித்து பிரதமர் லீ சர்ச்சை கருத்து: சிங்கப்பூர் தூதருக்கு மத்திய அரசு சம்மன்


இந்திய எம்.பி.க்கள் குறித்து பிரதமர் லீ சர்ச்சை கருத்து: சிங்கப்பூர் தூதருக்கு மத்திய அரசு சம்மன்
x

இந்திய எம்.பி.க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ தெரிவித்த கருத்து தொடர்பாக, அந்நாட்டு தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.


சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் உரையாற்றிய அந்த நாட்டு பிரதமர் லீ சியன் லூங், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவையும், தற்போதைய இந்திய எம்.பி.க்களின் நிலவரத்தையும் சுட்டிக்காட்டி பேசினார். 

அதாவது ஒரு நாட்டின் ஜனநாயகம் செயல்பட வேண்டும் என்பதை நேரு வெளிப்படுத்தினார் எனவும், அதேநேரம் நேருவின் இந்தியாவில் மக்களவை எம்.பி.க்கள் பாதி பேர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் தெரிவித்தார்.

இது இந்தியாவில் பெரும் அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. சிங்கப்பூர் பிரதமரின் உரை அடங்கிய வீடியோ பதிவு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இது தொடர்பாக மத்திய அரசை சாடியுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்குக்கு மத்திய அரசு நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய எம்.பி.க்கள் குறித்த சிங்கப்பூர் பிரதமரின் பேச்சுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு அவரை கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story