உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: நீண்ட நாட்களுக்குப் பிறகு முலாயம்சிங் பிரசாரம்..!


உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: நீண்ட நாட்களுக்குப் பிறகு முலாயம்சிங் பிரசாரம்..!
x
தினத்தந்தி 18 Feb 2022 4:36 AM IST (Updated: 18 Feb 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

முதல் முறையாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முலாயம்சிங், தன் மகன் அகிலேஷ் யாதவுக்கு அவர் ஓட்டு கேட்டார்.

லக்னோ, 

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவுகள் மீதி இருக்கின்றன.

எம்.பி.யாக உள்ள சமாஜ்வாடி நிறுவனர் முலாயம்சிங் யாதவ், முதுமை காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். அதனால் அவர் தேர்தல் பிரசாரங்களில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இந்தநிலையில், முதல்முறையாக தேர்தல் பொதுக்கூட்டத்தில் முலாயம்சிங் ஏறினார். தன் மகனும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியதாவது:- உலகத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பார்வை, இந்த தேர்தலில் சமாஜ்வாடி மீது விழுந்துள்ளது. தேர்தல் முடிவை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், ஒரு விஷயம் உறுதி. மக்களின் எதிர்பார்ப்புகளை சமாஜ்வாடி கட்சி பூர்த்தி செய்யும். மக்கள் பிரச்சினைகளான வறுமை, வேலையின்மை ஆகியவற்றுக்கு தீர்வு காணப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் சமாஜ்வாடியின் கொள்கை. அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். அதன்மூலம் விளைச்சல் பெருகினால், விவசாயிகள் வாழ்க்கை தரம் உயரும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளும் உருவாக்கப்படும். இங்கு திரண்டு வந்துள்ள மக்கள், அகிலேஷ் யாதவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேடையில், அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவின் காலை தொட்டு வணங்கினார்.

அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘இந்த ஊர், முலாயம்சிங் படித்த ஊர். தனது அரசியலை தொடங்கிய ஊர். 4-ம் கட்ட தேர்தலுக்குள், ஆட்சி அமைக்க தேவையான இடங்களை சமாஜ்வாடி கட்சி பெற்று விடும்’’ என்று கூறினார்.

Next Story