மனைவியை கைவிடும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்! - "கடந்த 7 ஆண்டுகளில் இத்தனை வழக்குகள்" - அதிர்ச்சி தகவல்- வீடியோ


மனைவியை கைவிடும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்! - கடந்த 7 ஆண்டுகளில் இத்தனை வழக்குகள் - அதிர்ச்சி தகவல்- வீடியோ
x
தினத்தந்தி 18 Feb 2022 10:19 AM IST (Updated: 18 Feb 2022 11:25 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் தங்கள் மனைவியை கைவிடுவது அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

அலை அலையாக கொரோனா வந்தாலும் அயல்நாட்டு மோகம் என்பது நம்மூரில் குறைந்தபாடில்லை. ஆனால், சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல் ஒன்று வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 

கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்வருமான கோவிந்தன் நம்பூதிரி கேட்டு கொண்டதன் பேரில் வெளியான தகவல்தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 156 இந்திய பெண்கள் வெளிநாட்டில் தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டிருப்பதும், இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ளது.  

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 615 வழக்குகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 586 வழக்குகளும், சிங்கப்பூரில் 237 வழக்குகளும்,  சவுதி அரேபியாவில் 119 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இது மட்டுமின்றி குவைத்தில் 111 வழக்குகளும், இங்கிலாந்தில் 104 வழக்குகளும், ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகளும், கனடாவில் 92 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்டுள்ள இந்திய மனைவிகளுக்கு இந்திய சமுதாய நல நிதி சார்பில் இந்திய தூதரங்கள் மூலம் 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி சென்றடைய வில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளின் திருமண சட்டத்தின்படி வழக்குகளை சுமுகமாகத் தீர்ப்பதற்கான நடைமுறை தீர்வு கொண்டுவரப்பட வேண்டியது முக்கியம் என்ற நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இது குறித்தும் இனி அதிகம் பேசப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Next Story