நான் உலகின் இனிமையான பயங்கரவாதி - அரவிந்த் கெஜ்ரிவால்
நான் உலகின் இனிமையான பயங்கரவாதி என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்,
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியான குமார் விஷ்வாஸ் அக்கட்சிக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியுள்ளார். குறிப்பாக, டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக விஷ்வாஸ் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவை பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
விஷ்வாஸ் அந்த வீடியோவில் பேசுகையில், ஒருநாள் நான் பஞ்சாப் முதல்-மந்திரி ஆகுவேன். இல்லையென்றால் தனி நாட்டின் (காலிஸ்தான்) முதல் பிரதமராகுவேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் என்னிடம் கூறினார்’ என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக விஷ்வாஸ் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்-மந்திரியாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதரவை பெறவும் தயாராக உள்ளார் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவர் பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு முன் பகத்சிங்கை பிரிட்டிஷார் பயங்கரவாதி என்று கூறினர். நான் பகத்சிங்கின் தீவிர ஆதரவாளன். வரலாறு இன்று மீண்டும் திரும்புகிறது. தற்போது ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பகத்சிங்கின் சீடனை (கெஜ்ரிவால்) பயங்கரவாதி என்கின்றனர். நான் உலகின் இனிமையான பயங்கராவாதி நானாகத்தான் இருப்பேன்.
பள்ளிக்கூடம், மருத்துவமனை , மின்சார வசதி, சாலை, குடிநீர் ஆகியவற்றை வழங்கும் பயங்கரவாதி நான்’ என்றார்.
Related Tags :
Next Story