பயங்கரவாதி என்று முத்திரை குத்தி என் மீது வழக்கு பதிய என்.ஐ.ஏ. திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்
‘பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தி, என் மீது ஓரிரு நாளில் வழக்கு பதிவு செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
சண்டிகார்,
இந்தியாவை உடைக்க திட்டம்
ஆம் ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் குமார் விஸ்வாஸ். இவர் ஏற்கனவே அக்கட்சியை விட்டு விலகி விட்டார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை ‘பயங்கரவாதி’ என்று பொருள்படும்படி கூறியிருந்தார்.
அவரது பேட்டியை பிரதமர் மோடியும் மேற்கோள் காட்டி, தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால் பதிண்டா நகருக்கு சென்றார்.
வழக்கு பதிவு
அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘‘இந்தியாவை 2 துண்டுகளாக உடைப்போம். ஒரு பகுதிக்கு நானும், இன்னொரு பகுதிக்கு நீயும் பிரதமர்களாக இருப்போம்’’ என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவிஞரிடம் (குமார் விஸ்வாஸ்) நான் தெரிவித்ததாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
இது நம்பும்படி இருக்கிறதா? இது ஒரு காமெடி. நாட்டை பிளக்க திட்டமிட்ட பயங்கரவாதி என்று என்னை கவிஞர் கூறியதன் அடிப்படையில், என் மீது ஓரிரு நாளில் வழக்கு பதிவு செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி சன்னியை பிரதமர் அலுவலகம் தொடர்பு கொண்டுள்ளது. என் மீது புகார் அளிக்குமாறு கூறியுள்ளது. அதன்பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.
காமெடி
பிரதமரும், காங்கிரஸ் தலைவர்களும் தேச பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை நகைச்சுவை ஆக்குகின்றனர்.
கடந்த காலத்தில், என் வீட்டை டெல்லி போலீஸ், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை சோதனையிட்டன. ஆனால், என்னை பயங்கரவாதியாக சித்தரிக்க எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
ஒரு கவிஞர் சொல்லியவுடன், என்னை ஆபத்தான பயங்கரவாதியாக பிரதமர் மோடி கருதிக்கொள்கிறார். என்ன காமெடி இது?
மோடி-காங்கிரஸ் கைகோர்ப்பு
பிரதமர் மோடி, காங்கிரஸ், பா.ஜனதா, அகாலிதளம் தலைவர் சுக்பிர்சிங் பாதல் ஆகிய அனைவரும் எனக்கும், ஆம் ஆத்மிக்கும் எதிராக கைகோர்த்துள்ளனர். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பதை தடுப்பதே அவர்களது நோக்கம்.
ஆனால், அதையும் மீறி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும். பள்ளிகள், ஆஸ்பத்திரியை மறுசீரமைப்போம். டெல்லியைப் போல், 24 மணி நேர மின்சாரமும், இலவச மின்சாரமும் அளிக்கப்படும்.
போதைப்பொருட்களை ஒழிப்போம். ஊழலுக்கு முடிவு கட்டப்படும். அதனால்தான் எல்லா கட்சிகளும் எங்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன. ஊழல் கட்சிகளே ஒன்று சேரும்போது, அவர்களுக்கு எதிராக பஞ்சாப்பின் 3 கோடி மக்களும் ஒன்றுசேர முடியாதா?
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story