புதுச்சேரி கவர்னர் மாளிகையில் எந்த கோப்பையும் தாமதப்படுத்துவது இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் எந்த கோப்பையும் தாமதப்படுத்துவது இல்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம் அடைந்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழா
புதுச்சேரி பொறுப்பு கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றத்தையொட்டி அவரது செயல்பாடுகள் குறித்த தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு ஓராண்டு செயல்பாடுகள் குறித்த தொகுப்பு நூலை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரம் என்ன? கவர்னரின் அதிகாரம் என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். இது கவர்னர் மாளிகை அல்ல. கவர்னரின் அலுவலகம் தான். மக்களுக்கு எந்தெந்த வகையில் நல்லது செய்ய முடியும் என்ற அடிப்படையில் தான் கோப்புகளுக்கு முடிவு எடுக்கிறோம். கவர்னர் மாளிகையில் எந்த கோப்பையும் தாமதப்படுத்துவது இல்லை.
வானுயர சிலை
கவர்னர் அலுவலகம் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது. அதிகாரமுள்ள பதவியிலும், அரசியலிலும் நான் தூய்மையை கடைபிடிக்கிறேன். கொரோனாவின் 2-வது அலையால் புதுவை மக்கள் பாதிக்கப்பட்ட போது விஞ்ஞானப்பூர்வமாக கொரோனாவை அணுகினோம். எந்த விஷயமாக இருந்தாலும் எதிர்கட்சியினர் சுட்டிக் காட்டலாம்.
கவர்னர் எப்படி வேண்டுமானாலும் பணியாற்ற இயலும் என்ற சூழல் இருந்தாலும் நான் உங்கள் சகோதரி போல, புதுச்சேரி மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற மனநிலையுடன் தான் பணியாற்றி வருகிறேன். தமிழ் வளர்த்த பாரதிக்கு வானுயர சிலையை புதுச்சேரியில் அமைக்கவேண்டும் என்பதே எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
இரட்டிப்பு மகிழ்ச்சி
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மாநில கவர்னராக கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. அதுவும் நான் முதல்-அமைச்சராக இருந்தபோது இங்கு கவர்னராக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் புதுச்சேரியில், மதியம் தெலுங்கானாவில், இரவு டெல்லியில் என பறந்து கொண்டே சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அதற்கு மன தைரியம் தேவை.
புதுவையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த கவர்னர் உறுதியாக உள்ளார். குறிப்பாக தீபாவளி, பொங்கல் பரிசு பொருட்கள், வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு கோப்புகளை அனுப்பினால் தாமதப்படுத்தாமல் உடனடியாக ஒப்புதல் கொடுக்கிறார். இவர் கவர்னராக வந்த பின் கவர்னர் மாளிகையில் கோப்புகள் தேங்கியதே இல்லை. புதுவை மாநில வளர்ச்சியிலும், மக்களின் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள்
விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, சாய்.சரவணன் குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள். அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story