கொரோனா பாதிப்பு குறைவு; உத்தர பிரதேசத்தில் இரவு ஊரடங்கு நீக்கம்
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் இரவு ஊரடங்கு நீக்கப்பட்டு உள்ளது.
லக்னோ,
நாட்டில் கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையில் பாதிப்புகள் தீவிரமடைந்தன. இதனை தொடர்ந்து, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் பாதிப்புகளும் அடுத்தடுத்து பரவின. இதனால், பாதிப்பு எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்தபோதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமீப நாட்களாக பெருமளவில் பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,
உத்தர பிரதேசத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 20 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை பாதிப்படைந்து உள்ளனர். 23,424 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் உத்தர பிரதேசத்தில் இரவு ஊரடங்கு நீக்கப்பட்டு உள்ளது என அரசு அறிவித்து உள்ளது.
இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு ஊரடங்கை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நீக்கி உத்தரவிட்டு உள்ளார். இதனால், நொய்டா, காசியாபாத் மற்றும் பிற நகரங்களில் இருந்தும் இரவு ஊரடங்கு நீக்கப்பட உள்ளது. இந்த உத்தரவு இன்றிரவு முதல் அமலுக்கு வருகிறது என உத்தர பிரதேச கூடுதல் முதன்மை செயலாளர் (உள்துறை) அவனீஷ் அவஸ்தி தெரிவித்து உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில், இரவு ஊரடங்கு நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story