பணக்கார பெண்களுடன் டேட்டிங்... பணமும் கிடைக்கும்; ஆசை காட்டி ரூ.60 லட்சம் மோசடி
பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று பணமும் ஈட்டலாம் என்ற ஆசையில் முதியவர் ஒருவர் ரூ.60 லட்சம் இழந்துள்ளார்.
புனே,
மராட்டியத்தின் புனே நகரில் 76 வயது முதியவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி, கடந்த ஆண்டு செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வந்தது. அதில், பிரெண்ட்ஷிப் கிளப் என்ற பெயரிலான விளம்பர செய்தியில், போன் எண் இருந்துள்ளது. அதனை தொடர்பு கொண்டு பேசிய முதியவருக்கு, அதிக வசதி படைத்த பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று பதிலுக்கு பணம் ஈட்டலாம் என பதிலளிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக முதியவர், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ரூ.60 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார். உறுப்பினர் கட்டணம், பாதுகாப்புக்காக முன் வைப்பு தொகை உள்ளிட்ட பிற விசயங்களுக்காக வேண்டி இந்த பணம் கேட்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு முதியவர் பணம் அனுப்பியுள்ளார்.
எனினும், இது மோசடி என அறிந்து போலீசை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், 28 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது வங்கி கணக்கே பணபரிமாற்றத்திற்கு பயன்பட்டு உள்ளது. தொடர் விசாரணையில் அனூப் மனோர் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை வரும் 22ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த மோசடியில் வேறு சிலரும் ஈடுபட்டு இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story