பஞ்சாப் சட்டசபைக்கு இன்று ஒரே கட்ட தேர்தல்


பஞ்சாப் சட்டசபைக்கு இன்று ஒரே கட்ட தேர்தல்
x
தினத்தந்தி 20 Feb 2022 2:32 AM IST (Updated: 20 Feb 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

ஒரே கட்ட தேர்தல்

முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்து களத்தில் உள்ளன. 93 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முக்கிய வேட்பாளர்கள்

முக்கிய வேட்பாளர்களாக முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி (காங்கிரஸ்-பதவுர், சம்கவுர் சாகிப்), சித்து (காங்கிரஸ்-அமிர்தசரஸ்), அமரிந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்-பாட்டியாலா), பிரகாஷ் சிங் பாதல் (சிரோமணி அகாலிதளம்-லம்பி), குல்வந்த் சிங் (ஆம் ஆத்மி-மொகாலி) உள்ளிட்டோர் களத்தில் நிற்கிறார்கள்.

ஆளும் காங்கிரசுக்காக ராகுல் காந்தி, சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத்சிங் சித்து, பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி, சிரோமணி அகாலி தளம் கட்சிக்காக பிரகாஷ் சிங் பாதல், ஆம் ஆத்மிக்காக கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

2.14 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்காக 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு முடிகிறது. வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உ.பி.யில் 3-ம் கட்ட தேர்தல்

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்ட சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

முதல் கட்ட தேர்தல் கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் சென்ற 14-ந் தேதி 55 தொகுதிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது.

3-ம் கட்ட தேர்தல் இன்று 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது.

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவர்களது அரசியல் எதிர்காலத்தை 2.15 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

முக்கிய வேட்பாளர்களில் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் ( சமாஜ்வாடி-கர்ஹால்) குறிப்பிடத்தக்கவர். அவரை எதிர்த்து பா.ஜ.க., மத்திய மந்திரி எஸ்.பி.சிங் பாஹலை களம் இறக்கி உள்ளது. அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவபால் சிங் யாதவ் (ஜஸ்வந்த்பூர்), பா.ஜ.க.வின் சதீஷ் மகானா (மகராஜ்பூர்), காங்கிரசின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மனைவி லூயிஸ் குர்ஷித் (பரூக்காபாத் சாதர்), முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆசிம் அருண் (பா.ஜ.க.- கன்னாஜ் சாதர்) உள்ளிட்டோரும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியில் உள்ளனர்.

கடந்த தேர்தலில் 59-ல் 49 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.

இங்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story