காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் ஆப்கானிஸ்தான் ஆயுதங்கள்..!! - எல்லையில் கண்காணிப்பு தீவிரம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Feb 2022 2:49 AM IST (Updated: 20 Feb 2022 3:22 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் ஆப்கானிஸ்தானின் ஆயுதங்கள் இருந்ததாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்படும் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆப்கானிஸ்தானில் பயன்பாட்டில் இருந்தவை என்று தெரியவந்துள்ளது. 

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் வெளியேறும் வரை பரவலாக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக ராணுவ அதிகாரி அஜய் சந்த்புரியா தெரிவித்தார். இரவிலும் பயன்படுத்தும் திறன்மிக்க தளவாடங்கள் உள்ளிட்ட இந்த ஆயுதங்கள் பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிவித்த அஜய், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு காஷ்மீரிலும் நிலைமை வேறுவிதமாக இருப்பதாக கூறினார்.

காஷ்மீரில் தற்போது சுமார் 200 பயங்கரவாதிகள் வரை இருப்பதாகவும், இதில் சுமார் 45 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் கிடைத்திருப்பதாகவும் அஜய் சந்த்புரியா தெரிவித்தார். காஷ்மீருக்குள் நுழைவதற்காக சுமார் 100 முதல் 130 வரை பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் காத்திருப்பதாகவும், எல்லையில் இந்திய வீரர்களின் தீவிர கண்காணிப்பால் அவர்களால் காஷ்மீருக்குள் நுழைய முடியவில்லை. வடக்கு காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது எனவும் அவர் கூறினார்.

ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் ஜைன்போரா பகுதியில் இருந்த பயங்கரவாதிகளை, நேற்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். மறைந்திருந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு, நம் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், இரு வீரர்கள் பலியாகினர்; பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். 

Next Story