இந்தியாவில் கொரோனா இறப்புகள் அதிகமா..? - மத்திய அரசு விளக்கம்
எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை பற்றிய ஊடக தரவுகளில் கூறியபடி இந்தியாவில் கொரோனா இறப்புகள் அதிகம் என்று கூறி இருப்பதை மறுத்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த தருணத்தில் எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை தொடர்பான தரவுகள் ஊடகம் ஒன்றில் வெளியாகி உள்ளன.
அதில் எல்.ஐ.சி.யிடம் பாலிசிதாரர்கள் வைத்த கிளைம்கள் (தொகையை வழங்க உரிமை கோரல்), எல்.ஐ.சி. வழங்கிய பாலிசி கிளைம்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுகைளில், 2021-ம் ஆண்டில் கொரோனா தொடர்பான இறப்புகள், அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சங்கள்:-
* கொரோனா இறப்புகள் அதிகாரபூர்வமாக அரசு அறிவித்ததை விட அதிகமாக இருக்கலாம் என்பது ஊகம், ஒரு பக்க சார்பானது. இது ஆதாரமற்றது.
* எல்.ஐ.சி.யால் தீர்க்கப்பட்ட கிளைம்கள், பாலிசிதாரர்களால் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புகளுக்காக எடுக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுக்கொள்கைகளுடன் தொடர்புடையவை. ஆனால் ஊடக அறிக்கை, கொரோனா இறப்புகள் குறைவாக பதிவாகி இருப்பதாக கூறுவது உண்மைகளை அடிப்படையாக கொண்டதல்ல.
* கொரோனா இறப்புகளை பதிவு செய்வதற்கு மிகவும் வெளிப்படையான, வலுவான அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.
* கொரோனா இறப்பு விவரங்களை அவ்வப்போது புதுப்பிக்குமாறு மீண்டும் மீண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா இறப்புகளை பதிவு செய்வதில் கூடுதல் ஊக்கம் இருக்கிறது. ஏனென்றால் பண இழப்பீடு தரப்படுகிறது. இது இறப்புகளை குறைவாக பதிவு செய்யும் வாய்ப்பை குறைக்கிறது. எனவே இறப்புகளை குறைத்து அறிக்கையிடுவது தொடர்பான முடிவுக்கு வருவது வெறும் ஊகம்தான்.
* கொரோனா இறப்புகளை பதிவு செய்வதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த வழிமுறைகளைப் பின்பற்றி இறப்புகளை சரியான முறையில் பதிவு செய்ய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story