தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாருடன் சந்திப்பு


தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 2:34 AM IST (Updated: 21 Feb 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மும்பையில் உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், இடது சாரிகள் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார்.

உத்தவ் தாக்கரே ஆதரவு

இந்தநிலையில் தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக சந்திரசேகர் ராவின் போராட்டத்திற்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முழு ஆதரவு அளித்து இருப்பதாகவும், மாநில உரிமை மற்றும் நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் போராட்டத்தை தொடர உத்தவ் தாக்கரே கூறியதாகவும்” அதில் கூறப்பட்டு இருந்தது.

மும்பையில் சந்திப்பு

இதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சந்திரசேகர் ராவை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உத்தவ் தாக்கரே மும்பை வருமாறு சந்திரசேகர் ராவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்தநிலையில் அவரது அழைப்பை ஏற்று சந்திரசேகர் ராவ் நேற்று மும்பை சென்றார். அவர் மலபார்ஹில்லில் உள்ள முதல்-மந்திரியின் இல்லமான வர்ஷா பங்களாவில் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார்.

இதேபோல மாநில மந்திரிகள் மற்றும் மாநில தலைவர்களும் சந்திரசேகர் ராவை சந்தித்தனர். சந்திரசேகர் ராவுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சில மந்திரிகளும் வந்து இருந்தனர்.

இதில் உத்தவ் தாக்கரே, சந்திரசேகர் ராவ் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் உள்ள கட்சிகளை ஒன்று திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல 2 பேரும் வர்ஷா பங்களாவில் ஒன்றாக அமர்ந்து மதிய உணவும் சாப்பிட்டனர்.

செய்தியாளர்களுடன்சந்திப்பு

இந்த சந்திப்புக்கு பிறகு உத்தவ் தாக்கரே, சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது சந்திரசேகர் ராவ் கூறியதாவது:-

இது நல்ல தொடக்கம். மற்ற பிராந்திய, தேசிய கட்சிகளுடன் பேசிவிட்டு நாங்கள் மீண்டும் சந்திப்போம். தற்போது உள்ள அரசியல் சூழல், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் மேம்பாட்டு பணிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம். தற்போது உள்ள சூழலில் நாட்டில் மாற்றம் கட்டாயம் தேவை என்பதை உத்தவ் தாக்கரேவும், நானும் ஏற்றுக் கொண்டோம். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மராட்டியத்தில் இருந்து எடுக்கப்படும் பாதை எப்போதும் வெற்றியை தரும். இது நல்ல தொடக்கம். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம் இது. தெலுங்கானாவும், மராட்டியமும் 1,000 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளது. எங்களுக்குள் நட்பான உறவு தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

பழிவாங்கும் நடவடிக்கை

இதேபோல உத்தவ் தாக்கரே பேசுகையில், “இன்றைய பழிவாங்கும் அரசியல் என்பது, இந்துத்துவா அல்லது இந்திய கலாசாரம் அல்ல. இந்த நிலை மாறவேண்டும். இதேநிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும். இதை பற்றி தான் நாங்கள் ஆலோசித்தோம். நாட்டின் வளர்ச்சியே முக்கியம். மாநிலங்களுக்குள்ளும் நட்புறவு தேவை. அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை சரியானது அல்ல. அவர்களின் ஆட்சிக்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றி பேசுவதற்கு பதிலாக, அரசியல் எதிரிகள் பற்றி பொய் மற்றும் தவறான தகவல்களை பரப்புகின்றனர்’’ என்றார்.

சரத்பவாருடன் சந்திப்பு

உத்தவ் தாக்கரே உடனான சந்திப்புக்கு பிறகு சந்திரசேகர ராவ் மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீடான சில்வா ஓக்கிற்கு சென்று, அவரையும் நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நாடு எதிர்கொள்ளும் விவசாய நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டியதின் அவசியம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

இது குறித்து சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விவசாயிகளின் நலனுக்காக தெலுங்கானா அரசு பல நல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது நாட்டின் மற்ற பகுதிகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக உள்ளது.

எங்கள் கவனம் வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் மட்டுமே உள்ளது. நாங்கள் மீண்டும் சந்திப்போம்” என்றார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்பது குறித்து மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் சந்திரசேகர ராவ் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story