மாநிலம் முழுவதும் 1,709 தெருவோர குழந்தைகள்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Feb 2022 5:29 AM IST (Updated: 21 Feb 2022 5:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மொத்தம் 1,709 தெருவோர குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஜனவரி 17-ந் தேதி நடந்த விசாரணையின்போது, கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் மும்முரம் காட்டினாலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிவாரணத்தை வழங்கமால் இருக்க கொரோனாவை காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் முன்னதாக தெருவோர குழந்தைகளை கண்டறிவதில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து மாநில அரசுகளுக்கு அதிருப்தியை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 1,709 தெருவோர குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 1,430 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவற்றில் 17 குழந்தைகள் திறந்தவெளி கூடாரத்தில் வசிக்கின்றனர். தெருவோரங்களில் கண்டறியப்பட்ட குழந்தைகளில் 343 பேர் கல்வி பயின்று வருகின்றனர். 1,454 குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

331 குழந்தைகளுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 803 குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாகவும், பிச்சை எடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். 194 குழந்தைகள் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,463 குழந்தைகள் அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த 5 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன.

192 குழந்தைகளின் பெற்றோர்களின் அடையாளத்தை கண்டறிந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 263 குழந்தைகளுக்கு மத்திய, மாநில திட்டங்களின் பயன்களை பெற்று வருகின்றனர். 5 குழந்தைகள் ஊக்க ஆதரவு பெற்று வருகின்றனர்.

தெருவோர குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


Next Story