காங்கிரஸ் அல்லாத புதிய அணியா? சிவசேனா விளக்கம்
காங்கிரஸ் இல்லாத அரசியல் முன்னணி சாத்தியம் இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை,
பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், இடது சாரிகள் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார்.
தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு முயற்சியாக பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட மாநில முதல் மந்திரிகளுடன் சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்த தொடங்கியிருக்கிறார்.
அந்த வகையில், கடந்த புதன்கிழமை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சந்திரசேகர் ராவை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உத்தவ் தாக்கரே மும்பை வருமாறு சந்திரசேகர் ராவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி, நேற்று மும்பை சென்ற சந்திரசேகர் ராவ், மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்த்ப் பேசினார். இதில் உத்தவ் தாக்கரே, சந்திரசேகர் ராவ் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் உள்ள கட்சிகளை ஒன்று திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் "காங்கிரஸ் இல்லாத அணி நிச்சயமாக உருவாக்கப்படாது. நேற்றைய சந்திப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாங்கள் ஒருபோதும் காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு அணி பற்றி பேசியதில்லை.
மம்தா பானர்ஜி, காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்குவது பற்றி பேசியபோது கூட சிவசேனாதான் முதலில் காங்கிரஸ் ஆதரவுக் குரலை எழுப்பியது. தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் நிச்சயமாக அனைவரையும் அரவணைத்து அழைத்து அணியை முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறோம்" என்று கூறினார்.
காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஆர்வம் காட்டி வரும் நிலையில், சிவசேனாவின் நிலைப்பாடு மம்தாவின் முயற்சியை வலுவிழக்க செய்யும் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
Related Tags :
Next Story