டெல்லி பூங்காவில் கொடூரம்: ரூ.300 தர மறுத்த வாலிபர் மனைவியின் கண் முன் படுகொலை
டெல்லியில் பூங்கா ஒன்றில் மனைவியுடன் அமர்ந்திருந்த வாலிபரை ரூ.300 தர மறுத்ததற்காக படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
அசாமை சேர்ந்தவர் ராம் கிஷோர் (வயது 20). கடந்த 3 மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. டெல்லியில் மோமோ என்ற உணவு பண்டம் விற்பனை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவியுடன் ஹரிநகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு பொழுதுபோக்க சென்றுள்ளார்.
அவர் பூங்காவில், மனைவியுடன் அமர்ந்திருந்தபோது, இரவு 10 மணியளவில் ராஜ் தாஸ் என்பவர் கையில் கத்தியுடன் அவரை நெருங்கியுள்ளார். ரூ.300 பணம் கொடுக்கும்படி கிஷோரிடம் கேட்டுள்ளார்.
ஆனால், தன்னிடம் பணம் இல்லை. இங்கிருந்து செல் என கிஷோர் கூறியுள்ளார். எனினும், அந்த நபர் தொடர்ந்து பணம் தரும்படி கேட்டுள்ளார். இதில், கிஷோர் அந்த நபரை தள்ளி விட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த கலவரத்தில், கத்தியால் கிஷோரை, ராஜ் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிஷோர் தரையில் சாய்ந்துள்ளார். அதன்பின் கிஷோரிடம் இருந்த பர்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு ராஜ் தப்பியோடி விட்டார்.
கிஷோரின் மனைவி அதிர்ச்சியில் உதவி கேட்டு அலறி இருக்கிறார். அவரது அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்துள்ளனர். கிஷோர் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து விட்டு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். எனினும், கிஷோர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் 2 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story