புதுமண தம்பதி அடித்துக்கொலை - குற்றவாளிக்கு தூக்கு
புதுமண தம்பதி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வெலமுண்ட் கண்டவயலில் என்ற பகுதியை சேர்ந்த உமர் (26) - பாத்திமா (19) இருவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தம்பதியர் வெலமுண்ட் பகுதியில் உள்ள புரிஞ்சியல்வயல் என்ற பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில், திருமணமான சில நாட்களில் உமர் - பாத்திமா வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். 2018 ஜூலை 6-ம் தேதி தம்பதியர் தங்கள் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும், வீட்டில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கபட்டது.
இந்த இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோழிக்கோட்டை சேர்ந்த கொலுங்கொட்டுமால் விஷ்வநாத் (48 வயது) என்பவரை கைது செய்தனர். நகை, பணத்திற்காக உமர் - பாத்திமா தங்கி இருந்த வீட்டிற்கு இரவு சென்ற கொள்ளையன் விஷ்வநாத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, தம்பதியர் விழித்துக்கொண்டதால் இருவரையும் கொள்ளையன் விஷ்வநாத் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த இரட்டைக்கொலை, கொள்ளை தொடர்பாக மாவட்ட கீழமை கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.
அதில், இரட்டை கொலை வழக்கில் விஷ்வநாத் குற்றவாளி என உறுதியானது. இதையடுத்து, குற்றவாளி விஷ்வநாத்திற்கு தூக்குதண்டை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளி விஷ்வநாத்திற்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
Related Tags :
Next Story