பெகாசஸ் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


பெகாசஸ் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 22 Feb 2022 1:57 AM IST (Updated: 22 Feb 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி, 

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரி வக்கீல் எம்.எல்.சர்மா, மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், பரன்ஜோய் குஹா தாகூர்தா எஸ்.என்.எம்.அபிதி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்ஸா சதாஷி உள்ளிட்டோர் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 27-ந்தேதி கூறிய தீர்ப்பு வருமாறு:-

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். தொழில்நுட்பம் அவசியம் என்கிற அதேவேளையில், அந்தரங்க உரிமையையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. அந்தரங்க உரிமை ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் முக்கியமானது.

மத்திய அரசுக்கு பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பெகாசாஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. நிபுணர் குழுவை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

அரசின் விசாரணை அமைப்புகளை நம்புவதை காட்டிலும், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறோம். பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரித்து, உரிய பரிந்துரைகளை நிபுணர்கள் குழு 8 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும் என உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான ரிட் மனுக்களை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நாளை மீண்டும் விசாரிக்கிறது.

Next Story