புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது
புதுச்சேரி சட்டசபை இன்று (புதன்கிழமை) கூடுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 26-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை நடந்தது. அப்போது முழுமையான பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதிக்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதன்படி இன்று (புதன்கிழமை) சட்டசபை கூடுகிறது. இந்த கூட்டம் ஒரு நாள் மட்டும் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்த கூட்டத்தை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நீட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சட்டசபையின் நுழைவுவாயில் மற்றும் பின்பக்க வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story