உத்தரகாண்ட் தேர்தலில் தபால் ஓட்டில் முறைகேடா..? - காங்கிரஸ் தலைவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
உத்தரகாண்ட் தேர்தலில் தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்துள்ளதாக காட்டும் காங்கிரஸ் தலைவரின் வீடியோ, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூன்,
பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற உத்தரகாண்ட் மாநிலத்தில், 70 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு கடந்த 14-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
பதிவான ஓட்டுகள் மார்ச் மாதம் 10-ந்தேதி எண்ணப்படுகின்றன. இங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இந்த நிலையில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஹரிஷ் ராவத், ராணுவ மையத்தில் ஒருவர் பல தபால் வாக்குச்சீட்டுகளில் ‘டிக்’ செய்து கையெழுத்திடுவது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் வீடியோவை டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அனைவரின் தகவலுக்காக ஒரு சிறிய வீடியோவை பகிர்ந்துகொண்டுள்ளேன். இது, ஒரு ராணுவ மையத்தில் ஒரு நபர் எப்படி பல வாக்குச்சீட்டுகளில் டிக்செய்து கையெழுத்திடுகிறார் என்பதை காட்டுகிறது. இதை தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ளுமா?’’ என கூறி உள்ளார்.
இந்த வீடியோ தொடர்பான கூடுதல் தகவல்களை ராவத்தின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர குமார் வெளியிட மறுத்து விட்டார். ஆனால் இது உத்தரகாண்ட் தேர்தலில் இருந்து வந்தது என்று மட்டும் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் இன்னும் முறைப்படி புகார் செய்யவில்லை.
இந்த வீடியோ பற்றி காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து. இதில் தேர்தல் கமிஷன் கண்காணித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இந்த வீடியோ குறித்து உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க. ஊடக பொறுப்பாளர் மன்வீர் சிங் சவுகான் கருத்து தெரிவிக்கையில், ‘‘இது காங்கிரசின் விரக்தியை காட்டுகிறது. தோல்வி உறுதி என்பதால் இது போன்ற தந்திரங்களில காங்கிரஸ் ஈடுபடுகிறது. மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு பற்றி பேசி வந்த அந்தக் கட்சி தற்போது வாக்குச்சீட்டு குறித்து பேசுவது அதன் விரக்தியையே காட்டுகிறது’’ என குறிப்பிட்டார். இந்த விவகாரம் உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
एक छोटा #वीडियो सबकी जानकारी के लिए वायरल कर रहा हूंँ, इसमें एक #आर्मी के सेंटर में किस प्रकार से एक ही व्यक्ति सारे #वोटों को टिक कर रहा है और यहां तक कि सभी लोगों के हस्ताक्षर भी वही कर रहा है, उसका एक नमूना देखिए, क्या इलेक्शन कमिशन इसका संज्ञान लेना चाहेगा?@UttarakhandCEOpic.twitter.com/yAd4UVPpLh
— Harish Rawat (@harishrawatcmuk) February 22, 2022
Related Tags :
Next Story