10, 12ம் வகுப்பு நேரடி பொதுத்தேர்வு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Feb 2022 5:51 AM IST (Updated: 24 Feb 2022 5:51 AM IST)
t-max-icont-min-icon

10, 12-ஆம் வகுப்புகளின் நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துது.

புதுடெல்லி, 

கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே பொதுத்தேர்வு நடத்த தடை விதிக்க கோரி குழந்தை நல ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா சகாய் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். 

நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பத்மநாபன் ஆஜராகி வாதாடினார். அப்போது நீதிபதிகள், ‘இந்த பொதுநல மனு தொடர்பாக உரிய தேர்வு அமைப்புகளை நாட வேண்டும். இந்த மனுவை விசாரித்தால் குழப்பங்கள் உருவாகும். மாணவர்கள் மத்தியில் பொய்யான நம்பிக்கை உருவாகி விடும்’ என்று தெரிவித்தனர்.

மேலும் இந்த பொதுநல மனு தொடர்பாக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது வக்கீல் பிரசாந்த் பத்மநாபன், ‘வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன’ என சுட்டிக்காட்டினார். 

இதற்கு நீதிபதிகள், ‘அதுவும் எங்களுக்கு தெரியும், தேர்வுகள் நடத்துவது தொடர்பாக உரிய அமைப்புகள் முடிவு எடுக்கட்டும். எதுமாதிரியான பொதுநல மனுவை தாக்கல் செய்கிறீர்கள்?’ என கேள்வி கேட்டனர். மேலும் தேர்வு தேதிகள், விதிமுறைகள் அறிவிக்கப்படும் முன்னரே இதுபோன்ற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தேர்வுகள் உரிய விதிமுறைகளின்படி நடைபெறாவிட்டால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம். ஆனால், இதுபோன்ற பொதுநல மனு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இது போன்ற பொதுநல மனுவை எதிர்காலத்தில் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் நேரடி பொதுத்தேர்வு நடத்த தடை இல்லை என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story