“ஐ லவ் யூ” என கூறுவது பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பதில்லை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
“ஐ லவ் யூ” என கூறுவது பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல் அல்ல என போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மும்பை,
மும்பை வடாலா பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் மீது 17 வயது சிறுமியின் குடும்பத்தினர் கடந்த 2016-ம் ஆண்டு புகார் ஒன்றை கொடுத்தனர்.
இதில் சம்பவத்தன்று வாலிபர் வெளியே சென்ற சிறுமியை பார்த்து கண் சிமிட்டியதுடன், அவளிடம் “ஐ லவ் யூ” என கூறியதாகவும், தட்டிகேட்ட அவரது தாயை மிரட்டியதாகவும் கூறியிருந்தனர்.
இதன்பேரில் அந்த வாலிபர் மீது வடாலா போலீசார் பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த போக்சோ கோர்ட்டு வாலிபர் மீதான குற்றங்களை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லாததால் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுபடி, சம்பவத்தன்று குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் அவரிடம் “ஐ லவ் யூ” என்று கூறியுள்ளார் என்பது தான். மாறாக வாலிபர் பின்தொடர்ந்து அவரிடம் காதலை சொல்லி துன்புறுத்தியதாக தெரியவில்லை.
சிறுமியிடம் “ ஐ லவ் யூ” என கூறியது, பெண் மீது வாலிபருக்கு இருந்த அன்பு உணர்வை வெளிப்படுத்தியதாகவே தெரிகிறது. இது பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் நடந்ததாக கூற முடியாது.
குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் பாலியல் நோக்கத்துடன் பெண்ணுக்கு எதிராக எந்த செயலையும் செய்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ அல்லது அவரது தாயாருக்கோ எதேனும் அச்சுறுத்தலை கொடுத்தார் என்பதற்கான ஆதாரத்தை அரசு தரப்பு பதிவு செய்யவில்லை. எனவே அவரை வழக்கில் இருந்து விடுவிக்கிறோம்.
இவ்வாறு கோர்ட்டு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story