உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் எதிரொலி: கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது பங்கு சந்தை
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் எதிரொலியாக இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் உலக பொருளாதாராத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இதன் எதிரொலியாக, இந்தியாவில் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 1813 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. இதனால் பங்குச்சந்தை 55,418 புள்ளிகளில் வர்த்தகமாக தொடங்கியது. அதன்பின் பெரிய அளவில் உயரவில்லை.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், மும்பை பங்குச்சந்தை இன்று மாலை 4 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 2,702.15 புள்ளிகள் கடும் வீழ்ச்சியடைந்து (4.72 சதவீதம்) 54,529.91 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 815 புள்ளிகள் சரிந்து (4.78 சதவீதம்) 16,247.95 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இரண்டு குறியீடுகளும் நாள் முழுவதும் சுமார் 3 சதவீதம் குறைவாக சிவப்பு நிறத்திலேயே வர்த்தகம் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story