அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு


அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு
x
தினத்தந்தி 26 Feb 2022 4:07 PM IST (Updated: 26 Feb 2022 4:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு நாளை(பிப்.27) போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது.

புதுடெல்லி, 

2022- ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டவியா இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மன்சுக் மாண்டவியா கூறும் போது, 

“ அண்டை நாடுகளில் இன்னமும் போலியோ நோய்த்தாக்கம் உள்ளது. எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.  போலியோவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை, பொது சுகாதார திட்டத்தின் வெற்றியாகும்.  5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.  

வரும் மாதங்களில்  5 வயதுக்குட்பட்ட 15 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது . எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் இருப்பதற்காக வீடு வீடாக சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க முன் வர வேண்டும் என்று நான் பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு நாளை(பிப்.27) போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. இதற்காக  43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறவுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் கோவிட் தொற்று இருந்தால் மையங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story