எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..! உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவதாக கூறி மோசடி


எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..! உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவதாக கூறி மோசடி
x
தினத்தந்தி 26 Feb 2022 6:03 PM IST (Updated: 26 Feb 2022 6:03 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி அவர்களுடைய பெற்றோர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் உலா வர தொடங்கியுள்ளது.

போபால்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.  இதற்காக இந்திய அரசும் ஏற்பாடுகளை செய்துள்ளது.  ருமேனியா, போலந்து வழியே இந்திய குடிமக்களை அழைத்து வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி அவர்களுடைய பெற்றோர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் உலா வர தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இணையதளம் மூலமாக இதுபோன்று மோசடி செய்து பணம் பறித்த மோசடி நபரை மத்தியபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். அந்த மோசடி நபர், மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.37 ஆயிரத்தை அபகரித்துள்ளார்.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த வைசாலி என்ற பெண்ணின் மகள் உக்ரைனில் படித்து வருகிறார். இப்போது ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால்,  அந்த பெண் தன்னுடைய மகளை மீட்டு தருவதற்காக பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளார்.

முன்னதாக, அந்த பெண் மாநில மத்திய அரசுகளை தொடர்பு கொண்டு தன் மகளை பத்திரமாக மீட்க உதவும்படி கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தை அறிந்த மோசடி கும்பல் அந்த பெண்ணிடம் நாடகமாடி பணத்தை கபளிகரம் செய்துள்ளது.

மோசடி செய்த நபர் இணையதளத்தில் தன்னை பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் பி.ஏ வாக அறிமுகமாகி உள்ளார். பின்னர்,  ரூ.42,000 பணத்தை  விமான டிக்கெட் எடுப்பதற்காக கேட்டுள்ளார்.

மறுபேச்சு ஏதுமின்றி பணத்தை கொடுத்த பெண், அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் பயந்துள்ளார். பலமுறை போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை.அதன்பின் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் அந்த குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

இதற்கிடையே, மத்தியபிரதேச மாநில மந்திரி பிரபுராம் சவுத்ரி அந்த பெண்ணிடம்,  மகளை வீட்டிற்கு அழைத்து வர அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார். மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் வைசாலியை தொடர்பு கொண்டு, அவருடைய  மகளை மீட்டுக்கொண்டு வருவோம் என உறுதியளித்துள்ளனர். 

Next Story