எல்.ஐ.சி.யில் 20 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி..!


எல்.ஐ.சி.யில் 20 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி..!
x
தினத்தந்தி 27 Feb 2022 2:17 AM IST (Updated: 27 Feb 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி.யில் 20 சதவீத அன்னிய ேநரடி முதலீட்டுக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி, 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் முக்கியமாக நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் நோக்கில் தானியங்கி வழிமுறை மூலம் 20 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் மூலம் எல்.ஐ.சி.யின் பங்குகளை ஆரம்ப பொது வழங்கல் (ஐ.பி.ஓ.) மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, பொதுத்துறை வங்கிகளுக்கான வெளிநாட்டு முதலீட்டு உச்சவரம்பு 20 சதவீதமாக இருப்பதால், எல்.ஐ.சி. மற்றும் பிற நிறுவனங்களுக்கும் 20 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. சட்டம் 1956-ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ நிறுவனமான எல்.ஐ.சி.யில், அன்னிய முதலீட்டுக்கான எந்த குறிப்பிட்ட விதியையும் ஏற்கனவே உள்ள வெளிநாட்டு முதலீட்டு கொள்கை பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சி.யில் தற்போது அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு உள்ளதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மெகா ஐ.பி.ஓ.வில் பங்கேற்க விரும்புவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைப்போல ரூ.1,600 ேகாடியில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின் செயலாக்க நிறுவனமாக தேசிய சுகாதார ஆணையம் இருக்கும். இந்த திட்டத்தின்கீழ் குடிமக்கள் தங்களுக்கான சுகாதார கணக்கு எண்ணை பெற முடியும். இதில் அவர்களது ஆரோக்கியம் தொடர்பான அனைத்து விவரங்களும் இணைக்கப்படும்.

இது தனிநபர்களுக்கான சுகாதாரப் பதிவுகளை உருவாக்குவதற்கும், அவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்கும் உதவும் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் முன்னோடி திட்டமான இந்த டிஜிட்டல் திட்டம் ஏற்கனவே லடாக், சண்டிகார், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன்-டையூ, புதுச்சேரி, அந்தமான்-நிகோபார்-லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story