உக்ரைனில் இருந்து திரும்பும் கேரள மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் - பினராயி விஜயன் அறிவிப்பு


உக்ரைனில் இருந்து திரும்பும் கேரள மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் - பினராயி விஜயன் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2022 5:35 AM IST (Updated: 27 Feb 2022 5:35 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் கேரள மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் கேரள் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

ரஷிய ராணுவம் கடந்த 24-ந் தேதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறி வருகிறார்கள். அங்கு கேரளாவை சேர்ந்த 2,340 பேர் மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இதற்கிடையே உக்ரைனில் இருந்து மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விமானங்கள் மூலமாக தாயகம் திரும்பும் கேரள மாணவர்களின் பயணசெலவை மாநில அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், ‘மத்திய அரசின் நடவடிக்கையால் சிறப்பு விமானம் மூலமாக உக்ரைனில் இருந்து டெல்லி, மும்பை விமானநிலையங்களுக்கு கேரள மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். அவர்களுக்கான விமான செலவையும், டெல்லி, மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கான விமான செலவையும் கேரள அரசே ஏற்றுக்கொள்ளும்’ என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல் முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார் (பீகார்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), ஜெய்ராம் தாகூர் (இமாசலபிரதேசம்) ஆகியோரும் தங்கள் மாநில மாணவர்களின் விமான செலவை அரசு ஏற்கும் என்று அறிவித்துள்ளனர்.

Next Story