கர்நாடகத்தில் 1,054 போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் கர்நாடகத்தில் உள்ள 1,054 போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.
பெங்களூரு,
சுப்ரீம் கேர்ட்டு, மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள 1,054 போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், சைபர் பிரிவு போலீஸ் நிலையங்கள், மகளிர் போலீஸ் நிலையங்கள் என 1,054 போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்த்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளை, நகர்ப்புறமாக இருந்தால், உதவி போலீஸ் கமிஷனர்களுக்கும், பிற மாவட்டங்களாக இருந்தால் துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கு சேமித்து வைக்கும் அளவுக்கு தொழில் நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையங்களில் நடைபெறும் தவறுகள் மூடி மறைக்கப்படுவதாகவும், போலீஸ் நிலையத்திற்கு நீதி கேட்டு செல்லும் மக்களிடம் போலீசார் சரியான முறையில் நடந்து கொள்வதில்லை, லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்ததால், இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்திருந்தது.
போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் போலீசார் தவறு செய்வது, லஞ்சம் கேட்பது தவிர்க்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story