கர்நாடகத்தில் ஐ.ஜி. உள்பட 277 போலீசார் மீது துறை ரீதியான விசாரணை
கர்நாடகத்தில் குற்றங்களில் ஈடுபட்ட ஐ.ஜி. உள்பட 277 போலீசார் மீது துறை ரீதியான விசாரணையை எதிர் கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொதுமக்களை பாதுகாக்கும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் சட்டபடியான நடவடிக்கையையும் எடுத்து வருகின்றனர். இதுபோன்று குற்றங்களை தடுக்கும் பணியில் ஈடுபடும் போலீசாரே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு துறை ரீதியான விசாரணையை எதிர் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அதன்படி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போலீஸ் துறையில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளில் இருந்து சாதாரண போலீஸ்காரர்கள் வரை 277 பேர் துறை ரீதியான விசாரணையை எதிர் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த 277 பேர் மீதும் ஊழல், லஞ்சம் வாங்கியது, பணியில் அலட்சியம், குற்றங்களில் ஈடுபட்டது போன்ற சம்பவங்களில் சிக்கி துறை ரீதியான விசாரணையை சந்தித்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா்.
இந்த 277 பேர் மீதும் நடந்து வரும் விசாரணை ஆண்டுகணக்கில் நடந்து வந்தாலும், இன்னும் நிறைவு பெறாமல் நிலுவையிலேயே இருக்கிறது. இவ்வாறு துறை ரீதியான விசாரணையை எதிர் கொண்டுள்ள சில போலீஸ்காரர்கள் குற்றமற்றவர்கள் என்பது உறுதியாக தெரிந்திருந்தாலும், அவர்கள் மீதான விசாரணை நிறைவு பெறாமல் கிடப்பில் கிடப்பதால் மீண்டும் பணிக்கு சேர முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
துறை ரீதியான விசாரணை நடைபெறுவது தாமதமாவதால் போலீசாருக்கு பதவி உயர்வு கிடைப்பது, ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் கிடைக்காமல் போய் விடுவதாகவும் போலீசார் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். அதனால் துறை ரீதியான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், தவறு செய்த போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story