இன்று எல்.பி.ஜி., நாளை பெட்ரோல்-டீசலா..?!! - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 March 2022 1:58 PM IST (Updated: 1 March 2022 1:58 PM IST)
t-max-icont-min-icon

வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன்-ரஷியா இடையேயான போரை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.  முதல் நாள் போரையடுத்து, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்தது.  எனினும், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயர்ந்தது. இந்த விலை உயர்வால், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் இன்று முதல் ரூ.2,012க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.  5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.27 உயருகிறது.  இதன்படி, சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.569க்கு விற்கப்பட உள்ளது.  எனினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்வில்லை.

இதேபோன்று தமிழகத்தில் வர்த்தக உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது.  எனினும் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்வில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கியால் சிலிண்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி ரூ.915.50க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.  வணிக சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதால்  உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் உணவு விலை பலமடங்கு உயர்வதற்கு  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 5 மாநில தேர்தல் காரணமாக விலை உயர்த்தாமல் இருந்த வந்த பெட்ரோல் டீசல் விலையும் மீண்டும் உயரும் என கூறப்படுகிறது. தற்போதே 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ள நிலையில் மீண்டும் விலையேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று எல்.பி.ஜி விலை உயர்ந்துள்ளது, நாளை பெட்ரோல்-டீசலா விலை உயர்த்தப்படுமா என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் உயர்த்தியதன் மூலம் சாதாரண மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கும் தங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதை மோடி அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இன்று எல்.பி.ஜி., நாளை பெட்ரோல்-டீசலா”என்று  ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story