போதைப்பொருள் வழக்கு; ஆர்யன் கானுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை- சிறப்பு புலனாய்வுக் குழு
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஆரியன் கானுக்கும் சம்பந்தம் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மும்பை,
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்.
இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது மும்பை ஐகோர்ட்டு, சிறப்பு கோர்ட்டு அனுதியின்றி வெளிநாடு செல்ல கூடாது, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட 14 நிபந்தனைகளை விதித்தது.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை தோறும் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆர்யன் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இதை விசாரித்த மும்பை ஐகோர்ட் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டது. மேலும், சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பும் நேரத்தில் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆர்யன் கான் கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் போதைப்பொருள் சதி அல்லது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஆரியன் கானுக்கும் சம்பந்தம் இருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தெரிவித்துள்ளது.
ஆரியன் கான் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை முடிவை சிறப்பு புலனாய்வுக் குழு, என்சிபி இயக்குனர் ஜெனரல் எஸ் என் பிரதானிடம் இன்னும் சில மாதங்களில் சமர்ப்பிக்க இருக்கும் நிலையில் இந்த தகவலை எஸ்ஐடி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story