உக்ரைன் விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி


உக்ரைன் விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 2 March 2022 8:27 PM IST (Updated: 2 March 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கியுள்ளனர் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 7-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியா, தொடர்ந்து அங்கு குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், உக்ரைனில்  உள்ள மக்கள், வேகமாக வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகள் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். எனினும், இன்னும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்படாமல் உள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கியுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது;-

'உக்ரைன் போர் குறித்த மேலும் சோகத்தைத் தவிர்க்க,

1. உக்ரைனில் இருந்து எத்தனை மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்?
2. உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்?
3. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு பகுதி வாரியான விரிவான திட்டம்

ஆகிய மூன்று கேள்விகளுக்கும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இதுகுறித்த அரசின் திட்டம் மற்றும் தெளிவான தகவலை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story