பொருளாதார தடைகள் எஸ்400 ஆயுதத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது - ரஷியா


பொருளாதார தடைகள் எஸ்400 ஆயுதத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது - ரஷியா
x
தினத்தந்தி 3 March 2022 1:46 AM IST (Updated: 3 March 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு ஆயுதத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது என ரஷியா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் ஐரோப்பியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. 

இதனால், ரஷியாவிடமிருந்து ஒப்பந்தத்தின்படி அதிநவீன எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பின் எஞ்சிய 4 தொகுப்பை இந்தியா பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல் வெளியானது.  

சுமார் ரூ. 40 ஆயிரம் கோடிக்கு செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எஸ் 400 ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் முதல் தொகுப்பை இந்தியாவிடம் ஏற்கனவே ரஷியா ஒப்படைத்துவிட்டது. இந்த முதல் தொகுப்பு சீன எல்லையில் நிலை நிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அந்த ஏவுகணை தொகுப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டிற்கு வர உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளபோதும் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பின் எஞ்சிய தொகுப்பை வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபொவ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் இந்தியா - ரஷியா இடையேயான வர்த்தகம், பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம்’ என்றார்.    

Next Story