உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தில் 6-வது கட்டமாக 57 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மேலும் 2 கட்ட தேர்தல் மட்டுமே மீதமுள்ளது. குறிப்பாக பூர்வாஞ்சல் பகுதிக்கு உட்பட்ட 111 தொகுதிகளை தவிர மீதமுள்ள 292 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்து உள்ளது.
மீதமுள்ள 111 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. அம்பேத்கர்நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பாஸ்தி, சந்த் கபிர் நகர், மகராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன.
இதில் ஆளும் பா.ஜனதா, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 676 பேர் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தகுதி பெற்றவர்களாக 2.14 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்திருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறியுள்ளார்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கி உள்ள கோரக்பூர் நகர்புறம் தொகுதியும், இன்றைய வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அடங்கியுள்ளதால் இன்றைய தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
அவருக்கு எதிராக சமாஜ்வாடி தரப்பில் மறைந்த பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர தத் சுக்லாவின் மனைவி நிறுத்தப்பட்டு உள்ளார். மேலும் ஆசாத் சமாஜ் கட்சி நிறுவனர் சந்திரசேகர் ஆசாத்தும் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.
இதைப்போல மாநிலத்தின் பல்வேறு மந்திரிகளும் இன்றைய தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகிறார்கள். பூர்வாஞ்சல் பகுதிக்கு உட்பட்ட இந்த 57 தொகுதிகளில் 11 இடங்கள் தனித்தொகுதிகள் ஆகும். கடந்த தேர்தலில் இந்த தொகுதிகளில் 46 இடங்களை பா.ஜனதா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story