உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இனி இந்தியாவில் படிக்கலாம் - மத்திய அரசு


Image courtesy: PTI
x
Image courtesy: PTI
தினத்தந்தி 5 March 2022 4:20 PM IST (Updated: 5 March 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இந்தியாவில் படிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி

உக்ரைன்-ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 9-வது நாளாக இன்றும் ரஷியா படைகள் ஆக்ரோ‌ஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், காவல் துறை அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்தவர்கள் வெளியேறி உள்ளனர்.

உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மற்றும் நமது மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட இருபது ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றுள்ளனர். உக்ரைனில் 7 மருத்துவகல்லூரிகளில் பெருமபாலான இந்தியர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.

இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடப்பதால், அங்கிருந்து தப்பித்து அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன் அவர்கள் இந்தியா வருகின்றனர். இன்னும் பல இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ரஷியா நடத்திய தாக்குதலில், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். 

இந்திய மருத்துவ ஒழுங்குமறைய அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரணமாக விதிகப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவிலேயே தங்களின் பயிற்சி மருத்துவத்தப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். அதற்காக வெளிநாட்டில் படித்த‌ மாணவர்கள் எப்.எம்.ஜி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த கோரிக்கைகளோடு வரும் விண்ணப்பக்களை மாநில அரசுகளின் மருத்துவக் கவுன்சில்களே பரிசீலித்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

மாநில மருத்துவக் கவுன்சில்கள், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் எப்எம்ஜி மருத்துவ தகுதித் தேர்வை நடத்த உறுதி செய்யலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தகுதியுடையவராக இருந்தால் அவருக்கு தற்காலிக பதிவை மாநில மருத்துவக் கவுன்சில்கள் வழங்கலாம். அதன்படி, மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயிலவோ அல்லது அவர்கள் ஏற்கெனவே முடித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பயிலலாம்.

இந்த பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதேபோல் மற்ற மருத்துவர்களுக்கு நிகராகவே ஸ்டைப்பெண்ட் எனப்படும் ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story