டெல்லி உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை
டெல்லியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
டெல்லியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த 2002-ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிப்பெற்றது. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சிங் கோஹில் கூறுகையில், மாநகராட்சித் தேர்தலில் வெற்றிப்பெற ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வெளிப்படைத் தன்மையுடன் தகுதியானவர்களுக்குச் சீட்டு வழங்கப்படும் என்றும் மாநிலத் தலைவர் அனில் சவுத்ரியுடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் முன்னாள் மாநிலத் தலைவர்களான அஜய் மக்கன், ஜே.பி. அகர்வால், அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் சுபாஷ் சோப்ரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story