புதுச்சேரி; கடல் சீற்றத்தால் ராக் கடற்கரையில் உள்ள பழம்பெரும் தூண் பாலம் இடிந்து சேதம்!


புதுச்சேரி; கடல் சீற்றத்தால் ராக் கடற்கரையில் உள்ள பழம்பெரும் தூண் பாலம் இடிந்து சேதம்!
x
தினத்தந்தி 6 March 2022 10:28 AM IST (Updated: 6 March 2022 10:28 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியின் ராக் கடற்கரையில் உள்ள பழம்பெரும் சின்னமான தூண் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

புதுச்சேரி,

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நேற்று முன்தினம்) மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (நேற்று) காலை அதே பகுதியில், வடதமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும், வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த கடல் காற்று வீசும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதன்படி நேற்று புதுச்சேரியில் பலத்த கடல்காற்று வீசியது. புதுவை கடல் பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்துவந்தன. இதன் காரணமாக கடற்கரை பகுதியில் ஏற்கனவே உருவாகியிருந்த செயற்கை மணல் பரப்பானது காணாமல் போனது. அலையின் சீற்றத்தை கடற்கரைக்கு வந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

இதற்கிடையே புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரியின் ராக் கடற்கரையில் உள்ள பழம்பெரும் சின்னமான தூணின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. புதுச்சேரியின் சுற்றுலா இடங்களில் முக்கிய பகுதியாக இந்த தூண்கள் நிறைந்த கடல் பாலம் இருந்து வந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்டிட அமைப்பு கடல் பரப்புக்கு மேலே இருந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடல் சீற்றத்தால் இடிந்து சேதத்துக்கு உள்ளானது.


Next Story