உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு..!
உத்தரபிரதேசத்தில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
லக்னோ,
403 உறுப்பினர் உத்தரபிரதேச சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி 10-ந்தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
அசம்கார், மாவ், ஜான்பூர், காஜிப்பூர், சண்டாலி, வாரணாசி, மிர்சாபூர், பதோகி மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.
ஆளும் பா.ஜனதா மற்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 613 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலத்தை 2.06 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கிறார்கள்.
மிகுந்த பரபரப்பாக காணப்பட்ட இந்த இறுதிக்கட்ட தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
குறிப்பாக பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியும் இந்த இறுதிக்கட்ட தேர்தலில் அடங்கியிருப்பதால் அங்கே சாலை பேரணி உள்ளிட்டவற்றை நடத்தி வாரணாசி மற்றும் அண்டை மாவட்டங்களில் வாக்கு சேகரித்தார்.
சமாஜ்வாடி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் அங்கு களமிறங்கினார். அகிலேஷ் யாதவ் மற்றும் கூட்டணி தலைவர்களுடன் பல இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வாரணாசியில் 4 நாட்கள் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இவ்வாறு அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடக்கிறது.
ஒரு காலத்தில் சமாஜ்வாடியின் கோட்டையாக கருதப்பட்ட இந்த பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி பெருவாரியான இடங்களை பிடித்திருந்தது. எனவே அந்த வெற்றியை இன்றைய தேர்தலிலும் தக்க வைக்க பா.ஜனதா தீவிர பிரசாரம் மேற்கொண்டது.
கொரோனாவுக்கு மத்தியிலும் சுமார் 2 மாதங்களாக நீடித்து வந்த உத்தரபிரதேச தேர்தல் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 10-ந்தேதி எண்ணப்படுகின்றன.
இதைப்போல உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தலில் பதிவான வாக்குகளும் அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
Related Tags :
Next Story