உக்ரைன் போர்: 17,400 இந்தியர்கள் மீட்பு; மத்திய அரசு தகவல்
உக்ரைன் போரை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து இதுவரை 17,400 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 12வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன. மொத்தமுள்ள 20 ஆயிரம் இந்தியர்களையும் மீட்போம் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 7 சிறப்பு விமானங்களில் 1,314 இந்தியர்கள் இன்று மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன், கடந்த பிப்ரவரி 22ந்தேதியில் இருந்து தொடங்கிய மீட்பு பணியில் இதுவரை 17,400க்கும் கூடுதலானோர் நாட்டுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இந்த 7 சிறப்பு விமானங்களில் 4 புதுடெல்லியிலும், 2 மும்பையிலும் இறங்கியது. ஒரு விமானம் இன்று மாலை வரவுள்ளது. 5 விமானங்கள் புடாபெஸ்டில் இருந்தும், புகாரெஸ்ட் மற்றும் சுசீவாவில் இருந்து ஒன்றும் இயக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story