இந்திய-சீன தளபதிகள் மட்டத்திலான 15வது சுற்று பேச்சுவார்த்தை 11ந்தேதி நடைபெறும்


இந்திய-சீன தளபதிகள் மட்டத்திலான 15வது சுற்று பேச்சுவார்த்தை 11ந்தேதி நடைபெறும்
x
தினத்தந்தி 8 March 2022 3:18 PM IST (Updated: 8 March 2022 3:18 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா மற்றும் சீனா இடையேயான தளபதிகள் மட்டத்திலான 15வது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11ந்தேதி நடைபெறும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.



புதுடெல்லி,



இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ந்தேதி மோதலில் ஈடுபட்டனர்.  மோதல் நடந்த சில தினங்களில், சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்தாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆனால், சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.  இந்த நிலையில் ரஷ்யா ஊடகமான டாஸ், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் என செய்தி வெளியிட்டது.  ஆனால், சீனா இதனை மறுத்தது.

இதன்பின்னர் கடந்த பிப்ரவரியில், 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரப்பூர்வ தகவலை சீன முதன் முறையாக ஒப்புக்கொண்டது.  இதற்கு சான்றாக, எல்லையில் நடந்த மோதலில் உயிர்தியாகம் செய்த 4 சீன இராணுவ வீரர்களுக்கு கவுரவ பட்டங்களும், முதல் தர தகுதி பாராட்டுகளும் வழங்கப்பட்டன.

இந்த மோதலுக்கு பின்னர் நடந்த இருதரப்பு படைகளின் தளபதிகள் மட்டத்திலான பலசுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லை பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது என முடிவானது.  இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், ஓராண்டுக்கும் மேலாக ஏறக்குறைய 50 ஆயிரம் படை வீரர்களை இந்தியாவுக்கு எதிராக எல்லையில் சீனா நிறுத்தியிருந்தது.  இந்நிலையில், கடும் குளிர் மற்றும் தீவிர வானிலையால் சீன வீரர்களின் உடல்நிலை பாதிப்படைந்தது.

இதனால், வீரர்கள் அனைவரையும் சுழற்சி முறையில் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு சீன ராணுவம் தள்ளப்பட்டது.  இந்தியாவுக்கு எதிராக குவிக்கப்பட்ட சீன வீரர்களில் 90% பேர் மாற்றப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு வட்டாரம் தெரிவித்தது.

கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான குளிரால் சீன படைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  எண்ணற்றோருக்கு காயமும் ஏற்பட்டு உள்ளது.  இதனை இந்திய தரப்பும் கவனித்து உள்ளது என கூறப்படுகிறது.  இதனால், பிற பகுதிகளில் இருந்து புதிய படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவும் ஒவ்வோர் ஆண்டும் படை வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி வருகிறது.  ஆனால் 40 முதல் 50 சதவீதம் எனற அளவிலேயே இது உள்ளது.  அதிக உயரமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு ஏற்ற நீண்ட அனுபவம் பெற்றுள்ள இந்திய ராணுவம், சீனாவுக்கு எதிராக கிழக்கு லடாக் பிரிவில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர்.

எனினும், எல்லை பகுதியில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன.  இரு தரப்பிலும் தளபதிகள் மட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 14 சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவால், பான்காங் சோ, கல்வான் மற்றும் கோக்ரா ஹாட் ஸ்பிரிங் ஆகிய பகுதிகளின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது.  மீதமுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் படைகள் வாபஸ் பெறுவது உள்ளிட்ட விசயங்களில் தீர்வு ஏற்படுவதற்கான முடிவுகளை மேற்கொள்வதற்கான பணிகளில் இரு நாட்டு ராணுவமும் கவனம் செலுத்த உள்ளன.  இதன் ஒரு பகுதியாக, ஏற்று கொள்ள கூடிய ஒரு தீர்வு ஏற்படுவதற்காக இரு நாட்டு தரப்பிலும் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் ஊக்கமளிக்கின்றன என பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்து உள்ளன.

இதன்படி, இந்தியா மற்றும் சீனா இடையேயான தளபதிகள் மட்டத்திலான 15வது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11ந்தேதி நடைபெறும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.  இதற்காக இந்திய தரப்பிலுள்ள சுஷூல் மோல்டோ முனை பகுதி சந்திப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.


Next Story